ஜொலித்த கேப்டன்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்ANI

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் குவஹாத்தியில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரில் ஜெயிஸ்வால் 4 ரன்களில் வெளியேற, அடுத்ததாக சாம்சன் மற்றும் டாம் கோலர் கேட்மோர் ஆகியோர் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ரியான் பராக் - அஸ்வின் கூட்டணி அமைத்தனர். 50 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார்.

அஸ்வின் 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு ரியான் பராக் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் யாரும் இவருடன் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அனைவரும் சிறப்பாகக் பந்துவீசினார்கள். சாம் கரன், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரப்சிம்ரன் சிங் 6, ரிலீ ரூசோவ் 22, ஷஷாங் சிங் 0, பேர்ஸ்டோ 14 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 8 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பிறகு ஜிதேஷ் சர்மா - சாம் கரன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. ஜிதேஷ் சர்மா 20 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அசத்தலாக விளையாடிய கேப்டன் சாம் கரன் அரை சதம் அடித்தார்.

இதைத் தொடர்ந்து 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சாம் கரன் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். அஷுதோஷ் சர்மா 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் சஹால், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in