
இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
செதேஷ்வர் புஜாரா கடந்த 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகு, இந்திய நடுவரிசை பேட்டிங்கை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் புஜாரா.
தனது திடமான தடுப்பாட்டத்தால் இந்திய அணியின் அடுத்த தூண் என ராகுல் டிராவிட்டுக்கு நிகராகப் பாராட்டப்பட்டவர் புஜாரா. டிராவிட்டின் 3-வது வரிசை பேட்டிங்கையும் இவரே பல காலங்களுக்கு வெற்றிகரமாக நிரப்பினார்.
இந்தியாவுக்காக 103 டெஸ்டுகளில் விளையாடியுள்ள புஜாரா 19 சதங்கள், 35 அரை சதங்கள் உள்பட 43.60 சராசரியில் 7,195 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் விளையாடினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் 2005-ல் அறிமுகமான புஜாரா, 278 ஆட்டங்களில் 66 சதங்கள், 81 அரை சதங்கள் உள்பட 51.82 சராசரியில் 21,301 ரன்கள் குவித்துள்ளார்.
2018-19 மற்றும் 2020-21-ல் ஆஸ்திரேலியாவில் பிஜிடி தொடரை வென்றதில் புஜாராவின் பங்களிப்பு அளப்பரியது. 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக பிஜிடி தொடரை வென்றபோது 4 டெஸ்டுகளில் 3 சதங்களுடன் 521 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார். 2020-21-ல் காபா டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகள் புஜாராவைக் கடுமையாகத் தாக்கியபோது, போர் வீரனைப் போல் களத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டு அரை சதம் அடித்து இந்தியாவின் மற்றொரு வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தார்.
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ள புஜாரா பிசிசிஐ மற்றும் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். தனது ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஆன்மிக குருக்கள் உள்ளிட்டோரது வழிகாட்டுதல்களுக்காக தான் கடன்பட்டுள்ளதாகவும் புஜாரா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சக வீரர்கள், உதவியாளர்கள், அணி நிர்வாகிகள், வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்கள், அனலிஸ்டுகள், நடுவர்கள், ஆடுகள பராமரிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், விளம்பரதாரர்கள், கூட்டாளிகள் என அனைவருக்கும் புஜாரா நன்றியைத் தெரிவித்துள்ளார். இறுதியாக தனது குடும்பத்தினரான பெற்றோர்கள் மற்றும் மனைவி பூஜா, மகள் அதிதி உள்ளிட்டோரது தியாகங்களையும் கண்ணியத்துடன் நினைவுகூர்ந்துள்ளார் புஜாரா.
பிஜிடி டெஸ்ட் தொடருக்கு மத்தியில் அஸ்வின் ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இவர்களுடைய வரிசையில் புஜாராவும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
Pujara | Cheteshwar Pujara | India | Team India | BCCI | Test Cricket | Pujara retires |