
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இச்சங்கத்தின் தலைவரான முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், பி.டி. உஷா மீது ஒலிம்பிக் சங்க செயற்குழு உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 12 பேர் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து, இது குறித்து வருகிற அக். 25 அன்று சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
முன்னதாக, பி.டி. உஷாவின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதினார்கள்.
இதன் தொடர்ச்சியாக, “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எனது தலைமைப் பொறுப்பையும், இந்திய விளையாட்டின் வளர்ச்சிக்கான எனது முயற்சியையும் களங்கப்படுத்தும் வகையில் உள்ளன” எனக் கூறி பி.டி. உஷா மறுப்பு தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது.
இதற்கும் மறுப்பு தெரிவித்த பி.டி. உஷா, “இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நிதி இழப்பு எதுவும் ஏற்படவில்லை, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்தார்.