பி.டி. உஷாவின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதிய நிலையில், பி.டி. உஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், சங்கத்தின் தலைமை செயல் அதிகாரியான ரகுராம் ஐயரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா நிராகரித்தார்.
இது தொடர்பாக பி.டி. உஷா, “இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விதிகளை முறைப்படி பின்பற்றிய பிறகே ரகுராம் ஐயருக்கு அப்பதவி வழங்கப்பட்டது” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் பி.டி. உஷாவின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதினர்.
இதன் தொடர்ச்சியாக, “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எனது தலைமைப் பொறுப்பையும், இந்திய விளையாட்டின் வளர்ச்சிக்கான எனது முயற்சியையும் களங்கப்படுத்தும் வகையில் உள்ளன.
எனது 45 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில், நமது விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்தும், விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் அலட்சியமாக இருக்கும் நபர்களை நான் பார்த்ததில்லை.
2036 ஒலிம்பிக்ஸை இந்தியாவில் நடத்த வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் இலக்கை ஆதரிக்காமல், அந்த நபர்கள் சுய-சேவை, பவர் பிளே மற்றும் விளையாட்டு நிர்வாகத்தில் நீண்டகாலத்திற்கு இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்” எனக் கூறி பி.டி. உஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.