மும்பை அணியிலிருந்து விலகும் பிரித்வி ஷா!

பிரித்வி ஷாவிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் கோரி கடிதம் வந்துள்ளதை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளதாகத் தகவல்.
மும்பை அணியிலிருந்து விலகும் பிரித்வி ஷா!
படம்: https://www.instagram.com/prithvishaw
1 min read

வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் பருவத்துக்கு முன்பு மும்பை அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு பிரித்வி ஷா கடிதம் எழுதியுள்ளார்.

25 வயது பிரித்வி ஷா இந்தியாவுக்காக 5 டெஸ்டுகள், 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மும்பைக்காக விளையாடி வந்தார். இவருடைய உடற்தகுதி மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக மும்பை ரஞ்சி அணியிலிருந்து பிரித்வி ஷா கடந்தாண்டு நீக்கப்பட்டார். இவர் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் சையது முஷ்டக் அலி கோப்பைப் போட்டியில் மும்பைக்காக விளையாடினார். சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மும்பைக்காக 9 ஆட்டங்களில் விளையாடி வெறும் 197 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் விஜய் ஹசாரே போட்டிக்கான மும்பை அணியிலும் பிரித்வி ஷா இடம்பெறவில்லை.

கடந்த சில மாதங்களாகவே இவருடைய உடற்தகுதி பெரும் விவாதமாகவே இருந்து வருகிறது. மேலும் பலத்த அடியாக கடந்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் எந்த அணியும் பிரித்வி ஷாவைத் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில், மும்பை அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழ் கோரியுள்ளார் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் கோரி கடிதம் வந்துள்ளதை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"என் கிரிக்கெட் வாழ்க்கையின் தற்போதைய நிலையில், வேறொரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்காக தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது என் வளர்ச்சிக்கும் கிரிக்கெட்டராக மேம்படுவதற்கும் உதவும் என நம்புகிறேன்.

வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் பருவத்தில் புதிய மாநில சங்கத்துக்காக விளையாடுவதற்கு ஏதுவாக தடையில்லாச் சான்றிதழை வழங்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என பிரித்வி ஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பைக்காக 32 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 49.03 சராசரியில் 2,648 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in