
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு, அவருடைய மனைவி ப்ரீத்தி இன்ஸ்டகிராமில் உருக்கமாக எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிரிஸ்பேன் டெஸ்ட் நிறைவடைந்ததும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். மறுதினமே அவர் சென்னை வந்தடைந்தார்.
இவருடைய ஓய்வு பலருக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அஸ்வினின் தந்தை ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நிலையில், அவருடைய மனைவி எதுவும் தெரிவிக்காமலே இருந்தார்.
இந்த நிலையில், ப்ரீத்தி இன்ஸ்டகிராமில் உருக்கமாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
"கடந்த இரு நாள்களாக நான் என்ன சொல்லலாம், ஒரு ரசிகையின் காதல் கடிதமாக எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அன்புள்ள அஸ்வின், உன்னுடன் உலகம் முழுக்க, மைதானங்கள் மைதானங்களாகச் சுற்றியதும் உன்னிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதும் அற்புதமான தருணங்கள்.
நீ எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் நான் விரும்பும் ஒரு விளையாட்டை அருகில் இருந்து பார்த்து மகிழும் பாக்கியத்தை எனக்கு அளித்தது.
கடந்த 13-14 ஆண்டுகளில் கிடைத்த பெரிய வெற்றிகள், தொடர் நாயகன் விருதுகள், சாம்பியன் கோப்பை, மெல்போர்ன், காபா வெற்றிகளில் கண்ணீர் சிந்தியது என எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.
நடந்தது எல்லாம் நல்லதற்கே என்று சொல்ல விரும்புகிறேன். இனிமேல் உனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழு. கூடுதல் கலோரிகளுக்கு இடம் ஒதுக்கு. குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கு. எதுவும் செய்யாமல் இருக்கவும் நேரம் ஒதுக்கு. உனக்குப் பிடித்த அனைத்தையும் செய்" என்று உருக்கமாக ப்ரீத்தி அஸ்வின் எழுதியுள்ளார்.