2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?: கம்பீர் விளக்கம்

“எனது அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைத்த பிசிசிஐ-க்கு நன்றி”.
கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்
2 min read

எனது முன்னேற்றம் இங்கு முக்கியமில்லை, அணியின் முன்னேற்றமே முக்கியமானது என்று கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் செல்கிறது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

சமீபத்தில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவருடைய பங்களிப்பில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது.

இந்நிலையில் இந்திய அணி இன்று மும்பையிலிருந்து கொழும்புவுக்கு புறப்படுகிறது. முன்னதாக, கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கம்பீர் பேசியதாவது

“வீரர்களுக்கு தேவையான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான உறவு நன்றாக இருக்க வேண்டும். மிகவும் வெற்றிகரமான அணியை வழிநடத்தப் போகிறேன். கம்பீரின் முன்னேற்றம் இங்கு முக்கியமில்லை, அணியின் முன்னேற்றமே முக்கியமானது. இலங்கை தொடர் முடிந்தப்பின் 10 டெஸ்டுகளில் விளையாடப் போகிறோம், அப்போது ஜடேஜா முக்கியமான வீரராக இருப்பார்.

ரோஹித், கோலி ஆகியோர் பெரிய போட்டிகளில் தங்களை நிரூபித்தனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை அவர்கள் விளையாட அனைவரும் விருப்பப்படுவார்கள். ஆனால், அது அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தது. கில் 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவருக்கு கேப்டன் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதால் துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளோம். பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்பட்ட ஓய்வை வழங்கவேண்டும்.

ஏனென்றால் முக்கியாமான போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கோலி உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது, அவர் மேல் மரியாதையும் உண்டு. அவர் மிகச்சிறந்த வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அணியின் வெற்றிக்காக இருவரும் சேர்ந்து உழைப்போம். அபிஷேக் நாயர், டென் டசாட்டே ஆகியோருடன் நான் ஏற்கெனவே பணியாற்றி உள்ளேன். வீரர்களுக்கும் அவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு.

எனது அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைத்த பிசிசிஐ-க்கு நன்றி. ஷமி தனது பயிற்சியைத் தொடங்கினார். வங்கதேசத்துக்கு எதிரான் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அணியில் உள்ள உதவி பயிற்சியாளர்கள் அவர்களது பணியைத் தொடருவார்கள், அபிஷேக் நாயர், டென் டசாட்டே ஆகியோர் துணைப் பயிற்சியாளர்களாக செயல்படுவார்கள், திலிப் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருப்பார். சைராஜ் பஹுதுலே தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார். மற்ற பயிற்சியாளர்கள் இலங்கை தொடர் முடிந்தப்பின் அறிவிக்கப்படுவார்கள்.

அகர்கர் பேசியதாவது

கேப்டன் பொறுப்புக்கு சூர்யகுமார் யாதவ் தகுதியானவர். அணியை பொறுத்தவரை ஹார்திக் பாண்டியாவும் முக்கியமான வீரர். ஆனால், காயம் அவருக்கு ஒரு பிரச்னையாக உள்ளது. எனவே அணிக்கு எப்போதும் விளையாடக்கூடிய வீரரை கேப்டனாக தேர்வு செய்ய முடிவெடுத்தோம். ஜடேஜா அணியில் இடம்பெறாதது கடினமான முடிவு தான், ஆனால் எல்லாராலும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற முடியாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in