பஞ்சாப் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 பருவத்துக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூலையில் தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கடந்த 2018-ல் நியமிக்கப்பட்டார். 2019, 2020 மற்றும் 2021 ஆகிய பருவங்களில் தில்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. 2020-ல் முதல்முறையாக தில்லி அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
2021-க்கு பிறகு தில்லி அணியால் குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. கடந்த ஐபிஎல் பருவத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 6-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஐபிஎல் பருவங்களில் 6-வது முறையாக தலைமைப் பயிற்சியாளரை மாற்றியுள்ளது பஞ்சாப் அணி. 2014 முதல் பஞ்சாப் அணியால் குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை.