தி ஹண்ட்ரட் போட்டியில் டிரென்ட் ராக்கெட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான் ஓவரில் 5 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி கைரன் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டிரென்ட் ராக்கெட்ஸ், சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டிரென்ட் ராக்கெட்ஸ் 100 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய சதர்ன் பிரேவ் 78 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கைரன் பொல்லார்ட் 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வந்தார்.
இந்த நேரத்தில் இன்னிங்ஸின் 81-வது பந்தை ரஷித் கான் வீச வந்தார். ஸ்டிரைக்கில் இருந்தது பொல்லார்ட். இந்த பந்து சிக்ஸருக்கு பறந்தது. இதைத் தொடர்ந்து, ரஷித் கான் வீசிய 4 பந்துகளும் நாலாப்புறமும் சிக்ஸருக்கு பறந்தன. 23 பந்துகளில் 45 ரன்கள் விளாசிய பொல்லார்ட் ரன் அவுட் ஆனாலும், அவருடைய அணியான சதர்ன் பிரேவ் இறுதியில் இரு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், தி ஹண்ட்ரட் போட்டியில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரஷித் கான்.