
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்படுகிறார்.
மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
ஜி7 உச்சி மாநாடு ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை இத்தாலியிலுள்ள அபுலியா பிராந்தியத்தில் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியன் உள்பட அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து தலைவர்கள் இத்தாலி செல்கிறார்கள். சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்பது 11-வது முறை. பிரதமர் மோடி தொடர்ந்து 5-வது முறையாக ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி மாநாட்டில் உரையாற்றுவது மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளார். குறிப்பாக, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
உக்ரைன் மீதான போர் குறித்து உச்ச மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.