
இந்தியாவின் பிரபல லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயது சாவ்லா, கடைசியாக இந்தியாவுக்காக 2012-ல் தனது 23-வது வயதில் விளையாடினார்.
பியூஷ் சாவ்லா தனது 16-வது வயதில் சேலஞ்சர்ஸ் கோப்பையில் கூக்லி பந்துவீசி சச்சின் டெண்டுல்கரை போல்ட் செய்து பிரபலமானார். சச்சின் விக்கெட்டை வீழ்த்திய அடுத்த ஆண்டே 2006-ல் இங்கிலாந்துக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் இந்திய அணி வீரராக அறிமுகமானார் பியூஷ் சாவ்லா.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பியூஷ் சாவ்லா இடம்பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 3 டெஸ்டுகள், 25 ஒருநாள் மற்றும் 7 டி20களில் மட்டுமே சாவ்லா விளையாடியுள்ளார். மொத்தம் 43 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள சாவ்லா, 192 ஆட்டங்களில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 4-வது இடத்தில் உள்ளார். 2014-ல் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது சாவ்லா தான் வெற்றிக்கான ரன்னை எடுத்தார்.
கடைசியாக மும்பை இந்தியன்ஸுக்காக 2024-ல் விளையாடினார். இந்த வருட ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.