உலகக் கோப்பை வென்றும் இந்திய அணி செய்த தவறுகள்: ‘பிடாக்’ பிரசன்னா விமர்சனம்

“தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்ல தகுதி இல்லாத அணி”.
‘பிடாக்’ பிரசன்னா
‘பிடாக்’ பிரசன்னா@Pdoggspeaks

இந்திய அணி பல தவறுகளை செய்த பிறகே உலகக் கோப்பையை வென்றதாக ‘பிடாக்’ பிரசன்னா பேசியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் என்னவெல்லாம் தவறு செய்தது என்பது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் குழுவில் பணியாற்றியவரும், பிரபல கிரிக்கெட் நிபுணருமான ‘பிடாக்’ பிரசன்னா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“இந்திய அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்திய அணி 170 ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று சொன்னேன். ஆனால், 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ராவின் இரண்டு ஓவர்களும் மெய்டன் ஆகியிருந்தாலும் மீதமிருந்த 3 ஓவர்களில் இலக்கை எட்டியிருக்கலாம்.

இப்படி ஒரு சூழலில் இருந்து வெற்றி பெற முடியவில்லை என்றால் தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்ல தகுதி இல்லாத அணி என்று தான் கூறவேண்டும்.

8 வெற்றிகளைப் பெற்ற தெ.ஆ. அணி இறுதிச் சுற்றில் விளையாட தகுதியான அணி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இறுதிச் சுற்றில் விளையாடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் சிராஜ் விளையாடி, பும்ரா இன்னும் ஒரு ஓவரை கடைசியில் வீசியிருந்தால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

கோலி ஆரம்பம் முதல், இறுதிச் சுற்றில் எப்படி விளையாடினாரோ அதேபோல் விளையாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும். கிரிக்கெட் தெரியாத பலரும் அவர் அதிரடியாக விளையாடவில்லை என்றனர்.

அடுத்ததாக, பார்படாஸில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்று சொன்னேன். இந்த உலகக் கோப்பையில் எந்த ஆட்டத்தில் இந்திய அணியின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக விளையாடினார்கள்?

நான் எப்போதும் சரியாக பேசுவதாகக் கூறவில்லை. ஆனால், நான் எதையும் யோசிக்காமல் பேசுவதில்லை. இந்திய அணி கோலியை 3-வது நிலையில் விளையாட வைத்து, இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியிருந்தால் ஆட்டத்தில் நிலைமை மாறியிருக்கும்.

3 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு அக்‌ஷர் படேலை களமிறக்கியது நல்ல முடிவு. இறுதிச் சுற்றில் கோலி விளையாடியது போல, 3-வது நிலையில் களமிறங்கி விளையாடி இருக்க வேண்டும். ஜெயிஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைத்திருக்க வேண்டும். ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர் இல்லாத காரணத்தால் மட்டுமே கோலி அங்கு தொடக்க வீரராக களமிறங்கினார்.

துபே ஃபார்மிலேயே இல்லை. அக்‌ஷர் படேல் அன்று விரைவில் வெளியேறி, இந்திய அணி 15 ரன்கள் குறைவாக அடித்திருந்தால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்திருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in