தோற்றுவிட்டு அழக் கூடாது: தென்னாப்பிரிக்காவைச் சாடிய பிடாக் பிரசன்னா

"2009 சாம்பியன்ஸ் கோப்பையில் எல்லா ஆட்டங்களையும் செஞ்சூரியனில் மட்டுமே விளையாடியது தென்னாப்பிரிக்கா."
தோற்றுவிட்டு அழக் கூடாது: தென்னாப்பிரிக்காவைச் சாடிய பிடாக் பிரசன்னா
படம்: https://x.com/_FaridKhan
2 min read

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு, பயணத் திட்டமிடலைக் காரணம் சொன்ன தென்னாப்பிரிக்காவை பிடாக் பிரச்ன்னா சாடியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. டேவிட் மில்லர் அடித்த சதம் அந்த அணிக்குக் கைக்கொடுக்கவில்லை.

அரையிறுதிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் மில்லர், அரையிறுதிக்கான பயணத் திட்டமிடல் குறித்து விமர்சனங்களை வைத்திருந்தார்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, முதல் அரையிறுதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டுக்கும் நடுவில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி என்பதால், இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல் பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகளையும் முன்கூட்டியே துபாய் வரவழைத்தது ஐசிசி.

காரணம், துபாய் சூழலுக்கு வீரர்கள் ஒத்துவர நேரம் எடுக்கும் என்பதால், இரு அணிகளுக்கும் சம வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த முடிவை ஐசிசி எடுத்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, ஆஸ்திரேலியா முன்கூட்டியே துபாய் வந்தடைந்தது. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்த கையோடு பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்தது. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோதுவது உறுதியான பிறகு, துபாயிலிருந்து புறப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பியது தென்னாப்பிரிக்கா. இது மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது.

தோல்விக்குப் பிறகு மில்லர் கூறுகையில், "இது வெறும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் விமானப் பயணம் தான். ஆனால், நாங்கள் அதைச் செய்தாக வேண்டும். ஆட்டம் முடிந்தவுடன் அதிகாலையில் புறப்பட்டோம். துபாய்க்கு மாலை 4 மணிக்குச் சென்றடைந்தோம். பிறகு காலை 7.30 மணிக்கு மீண்டும் திரும்பி வந்தோம். இது சரியானது அல்ல. 5 மணி நேரம் விமானப் பயணம் தானே, மீதமுள்ள நேரம் ஓய்வெடுத்து மீண்டு வருவதற்கான சமயம் என்பதல்ல விஷயம். இது உகந்த சூழல் கிடையாது" என்று டேவிட் மில்லர் கூறியிருந்தார்.

இதற்கு தென்னாப்பிரிக்க அணியில் முன்பு பணியாற்றிய பிடாக் பிரசன்னா அஸ்வின் யூடியூப் சேனலில் எதிர்வினையாற்றியுள்ளார்.

"2009 சாம்பியன்ஸ் கோப்பையில் எல்லா ஆட்டங்களையும் செஞ்சூரியனில் மட்டுமே விளையாடியது தென்னாப்பிரிக்கா. அதற்காகக் கோப்பையை வென்றார்களா? மண்ணைக் கவ்வவில்லையா?

இப்போது வந்து இந்தியா துபாயில் மட்டுமே விளையாடுகிறது என்று அவர்கள் புகார் கூறலாமா? தோற்றுவிட்டு அழக் கூடாது. இதனால் தான் அவர்கள் எந்தப் போட்டியையும் ஜெயிப்பதில்லை" எனக் காட்டமாக விமர்சித்தார் பிடாக் பிரசன்னா.

சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கியதிலிருந்தே இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாடுவது பேசுபொருளாகி வருகிறது.

முன்பு, இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதால் உள்ள நன்மைகள் பற்றி தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பேட்டர் ரசி வான்டர் டுசன், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்துக்கு முன்பு கராச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிச்சயமாக, இந்திய அணிக்குச் சாதகமான விஷயம் தான். ஒரே இடத்தில் இருந்துகொண்டு, ஒரே விடுதியில் தங்கிக் கொண்டு, ஒரே மாதிரியான வசதிகள் கிடைக்குமிடத்தில் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரே மைதானத்தில் விளையாடி, எல்லா முறையும் ஒரே ஆடுகளத்தில் விளையாடினால், நிச்சயமாக இது சாதகமான அம்சம்தான். இதற்குப் பெரிய விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை" என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in