சாம்பியன்ஸ் கோப்பை: பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 736 கோடி நஷ்டம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைத்த வருவாய் வெறும் ரூ. 52 கோடிதான்.
சாம்பியன்ஸ் கோப்பை: பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு 
                          ரூ. 736 கோடி நஷ்டம்!
ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 736 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்காக ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களைப் புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏறத்தாழ ரூ. 500 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. இது அவர்கள் திட்டமிட்டதைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம். மேற்கொண்டு, போட்டிக்குத் தயாராக ரூ. 340 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. ஆனால், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைத்த வருவாய் வெறும் ரூ. 52 கோடிதான். இதன்மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 736 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் கராச்சியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அடுத்து இந்தியாவை எதிர்கொள்வதற்காக துபாய் வந்தடைந்தது. இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராவல்பிண்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருந்தது. அதுவும் மழையால் கைவிடப்பட்டது. இதன்மூலம், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை நடத்திய பாகிஸ்தான், அதன் சொந்த மண்ணில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது.

இந்த மோசமான நிதி மேலாண்மை காரணமாக இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய டி20 சாம்பியன்ஷிப்பில் வீரர்களுக்கான ஆட்ட ஊதியம் 90% வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும். மாற்று வீரர்களுக்கான ஊதியம் 87.5% வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், "அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல், ஆட்ட ஊதியம் ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி இந்த முடிவை நிராகரித்து, இவ்விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in