சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி!

கடந்த ஆட்டத்தில் உலக சாதனை படைத்த பஞ்சாப் அணி, இம்முறை 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து...
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி!
ANI

சேப்பாக்கத்தில் மீண்டுமொருமுறை தோற்றுள்ளது சிஎஸ்கே அணி. இம்முறை பஞ்சாபிடம் தோற்றதால் புள்ளிகள் பட்டியல் மேலும் சுவாரசியமாகியுள்ளது.

வழக்கம்போல இன்றைக்கும் டாஸில் தோற்றார் ருதுராஜ் கெயிக்வாட். சென்னையில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் சொல்வது போல சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்த அழைத்தார் சாம் கரண். சிஎஸ்கேவில் ரிச்சர்ட் கிளீசன் அறிமுகமானார். காயம் காரணமாக பதிரனா விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் துஷார் தேஷ்பாண்டேவும் இல்லை.

பவர்பிளே சிஎஸ்கேவுக்கு சந்தோஷமாக அமைந்தது. சாம் கரண் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் ரஹானே. பவர்பிளேயில் ஒரு விக்கெட்டும் இழக்காமல் 55 ரன்கள் என்பதே ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது.

நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்ப்ரீத் பிராரும் ராகுல் சஹாரும் மாயாஜாலம் செய்தார்கள். ராஹானேவை 29 ரன்களுக்கு வீழ்த்திய பிரார், அதே ஓவரில் ஷிவம் டுபேவை டக் அவுட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். அடுத்த ஓவரில் ஜடேஜாவை 2 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்தார் சஹார். 10 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது சிஎஸ்கே.

பவர்பிளேவுக்குப் பிறகு அடுத்த 9 ஓவர்களுக்கு பேட்டர்களால் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் போனது. நடு ஓவர்களீல் சிஎஸ்கே சொதப்பியதுதான் தோல்விக்குக் காரணமாக இருந்தது.

நிதானமாக விளையாடிய ரிஸ்வி, 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 17-வது ஓவரில் சிஎஸ்கே அணிக்கான முதல் சிக்ஸரை அடித்தார் ருதுராஜ். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரும் அடித்தார். கடைசி ஓவர்களில் கொஞ்சம் ரன்கள் வந்தன. தோனியும் களமிறங்கி ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து 14 ரன்களுக்கு கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே கஷ்டப்பட்டு 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பிரார் - சஹார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள்.

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இலக்கை விரட்டியது பஞ்சாப். முதல் ஓவரிலேயே காயம் காரணமாக இரு பந்துகள் மட்டும் வீசிவிட்டு வெளியேறினார் தீபக் சஹார். பனிப்பொழிவு, பந்துவீச்சாளர்களுக்க்கு மேலும் சிரமத்தை அளித்தது. பிரப்சிம்ரனை 13 ரன்களுக்கு வெளியேற்றினார் கிளீசன். பவர்பிளேயில் பஞ்சாப் அணிக்கு 52 ரன்கள் கிடைத்தன. ஜானி பேர்ஸ்டோவும் ரிலீ ரூசோவும் நிறைய பவுண்டரிகள் அடித்தார்கள். 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து டுபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் பேர்ஸ்டோ. அடுத்ததாக ரூசோ, தாக்குர் பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போதே பஞ்சாப் அணி 113 ரன்களைத் தொட்டிருந்தது. சாம் கரணும் ஷஷாங் சிங்கும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 26, 25 ரன்களை எடுத்தார்கள். இலக்கை விரட்டுவதில் கடந்த ஆட்டத்தில் உலக சாதனை படைத்த பஞ்சாப் அணி, இம்முறை 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கேவுக்கு மறக்கக் கூடிய நாளாக இன்று அமைந்துவிட்டது. புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 4-வது இடத்திலும் பஞ்சாப் 7-வது இடத்திலும் இருந்தாலும் இம்முறை போட்டி பலமாக இருக்கும் என்பது உறுதி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in