இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கு முன்பு இன்று (வியாழன்) செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். முதல் நான்கு டெஸ்டுகளில் 10.42 சராசரியில் 73 ரன்கள் மட்டுமே எடுத்த மிட்செல் மார்ஷ், சிட்னி டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதில் மாற்று ஆல்-ரவுண்டர் வெப்ஸ்டர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஷெஃபில்ட் ஷீல்ட் பருவத்தில் 58.62 சராசரியில் 938 ரன்களும், 29.3 சராசரியில் 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் வெப்ஸ்டர். இவர் ஆஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் அணிக்கான அறிமுகமாகும் 469-வது வீரர் ஆவார்.
மிட்செல் ஸ்டார்க் காயம் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், சிட்னி டெஸ்டில் அவர் விளையாடுவதை கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார்.
பெர்த் டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தது. மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியாவும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவும் முனைப்பில் உள்ளன. சிட்னி டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.