
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 தொடங்கியது. 2025-ன் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் பதற்றமான சூழல் நிலவியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்தியா மேற்கொண்ட ஆபரேஷனுக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவும் பதிலடி கொடுக்க இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ல் கூடும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.