ஆடவர் ஹாக்கி காலிறுதியில் கிரேட் பிரிட்டனை ஷூட் அவுட் முறையில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி காலிறுதிச் சுற்றில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது. கிரெட் பிரிட்டன் மற்றும் இந்தியா முதல் 15 நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறின. இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக மூன்று வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், திணறியது. இரு அணிகளாலும் முதல் 15 நிமிடத்தில் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.
17-வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இதனால், அமித் ரோஹிதாஸ் வெளியேற்றப்பட, இந்திய அணி 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது. அடுத்த 5-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். இந்தப் போட்டியில் இது இவருக்கு 7-வது கோல்.
இதிலிருந்து அடுத்த 5 நிமிடங்களில், அதாவது 27-வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டனும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தன.
இதனால், இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. 60 நிமிடங்கள் முழுமையாக நிறைவடையும் வரை இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால், ஆட்டம் ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டன் வீரர் ஜேம்ஸ் அல்பெரி முதல் வாய்ப்பை கோலாக மாற்றினார். இந்தியாவுக்கான முதல் வாய்ப்பை ஹர்மன்பிரீத் கோலாக மாற்றி அசத்தினார்.
கிரேட் பிரிட்டன் வீரர் வாலஸ் அந்த அணியின் இரண்டாவது வாய்ப்பை கோலாக மாற்றினார். ஸ்ரீஜேஷால் இதைத் தடுக்க முடியவில்லை. இந்திய வீரர் சுக்ஜீத் இரண்டாவது வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார்.
கிரேட் பிரிட்டனின் மூன்றாவது வாய்ப்பில் கானோர் வில்லியம்சனை கோல் அடிக்க விடாமல் ஸ்ரீஜேஷ் தடுத்தார். இதனால், இவர் அடித்த கோல் வெளியே சென்றது.
இந்தியாவுக்காக லலித் பந்தை மெதுவாக தட்டிச் சென்று மூன்றாவது கோலையும் அடித்தார். இதனால், இந்தியா ஒரு கோல் முன்னிலைப் பெற்றது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
4-வது வாய்ப்பில் கிரேட் பிரிட்டன் வீரர் ரோபரால் கோல் அடிக்க முடியவில்லை. ஸ்ரீஜேஷ் மீண்டும் ஒரு கோலை தடுத்து அற்புதத்தை நிகழ்த்தினார். கடைசி வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. இதில் ராஜ்குமார் பால் அற்புதமாக கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அதுவும் 10 வீரர்களைக் கொண்டு விளையாடி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது இந்தியா.