பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும், மகளிர் 200 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.04 மீ. உயரம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேபோல், மகளிர் 200 மீட்டர் டி35 பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே 100 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பிரீத்தி பால் இப்பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒரே பாராலிம்பிக்ஸில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
நடப்பு பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.