கடைசி வரை போராடியும் வீண்: ரிஷப் பந்த் அதிரடியில் வீழ்ந்த குஜராத்!

கடைசி இரு ஓவர்களில் தில்லி 53 ரன்களைக் குவித்தது.
கடைசி வரை போராடியும் வீண்: ரிஷப் பந்த் அதிரடியில் வீழ்ந்த குஜராத்!

குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் தில்லியில் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லியில் தொடக்க பேட்டர்களாக பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கெர்க் களமிறங்கினார்கள். முதல் மூன்று ஓவர்களில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியதால் தில்லி 34 ரன்கள் எடுத்தது.

4-வது ஓவரில் இரு தொடக்க பேட்டர்களையும் வீழ்த்தி திருப்புமுனையை உண்டாக்கினார் சந்தீப் வாரியர். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஷை ஹோப்பையும் வீழ்த்தி தில்லியைக் கலங்கடித்தார் சந்தீப் வாரியர்.

6 ஓவர்கள் முடிவில் தில்லி 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்தது.

அக்‌ஷர் படேல் மூன்றாவதாகக் களமிறங்கியது தில்லிக்கு இன்று பலன் தந்தது. இவரும் கேப்டன் ரிஷப் பந்தும் சிறப்பாகக் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். 10 ஓவர்கள் முடிவில் தில்லி 80 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, இருவரும் படிப்படியாக அதிரடிக்கான கியரை மாற்றினார்கள். இரு இடதுகை பேட்டர்கள் இருந்ததால், சாய் கிஷோரை பந்துவீச அழைக்காமல் தாமதித்தார் கில்.

மற்ற பந்துவீச்சாளர்கள் யாராலும் இந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. அக்‌ஷர் படேல் 37 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். கடைசி 5 ஓவர்களில் ரிஷப் பந்த், பழைய பந்த்தாக வந்து ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். குறிப்பாக மோஹித் சர்மா ஓவர்களில் சிக்ஸர்கள்தான்.

அக்‌ஷர் படேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து நூர் அஹமது சுழலில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்து ஆட்டமிழந்தார். இந்த இணை 68 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தது.

ரிஷப் பந்துடன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் இணைந்து மிரட்டினார். 19-வது ஓவரில் சாய் கிஷோரை பந்துவீசச் சொன்னார் கில். இது பலனளிக்கவில்லை. இந்த ஓவரில் ஸ்டப்ஸ் இரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை அடித்தார். தில்லிக்கு 22 ரன்கள் கிடைத்தன.

மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் பந்த் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் மட்டும் தில்லிக்கு 31 ரன்கள் கிடைத்தன.

தில்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பந்த் 43 பந்துகளில் 88 ரன்களும், ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தார்கள்.

மோஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்தார்.

225 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத்துக்கு கேப்டன் கில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

சாய் சுதர்சன் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி குறிக்கோளுடன் களமிறங்கினார். இவரும் ரித்திமான சஹாவும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 6 ஓவர்கள் முடிவில் குஜராத் 67 ரன்கள் எடுத்தது.

25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த சஹா, குல்தீப் சுழலில் அக்‌ஷரின் அட்டகாசமான கேட்சில் ஆட்டமிழந்தார். ஓமர்ஸாய் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். எனினும், சாய் சுதர்சன் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தார். 29 பந்துகளில் அரை சதம் அடித்த இவர் பெரிய ஷாட்டுக்கு முயன்று 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷாருக் கான் வந்தவுடன் மிரட்டலான சிக்ஸரை அடித்தாலும், ரிஷப் பந்தின் சிறப்பான கேட்சில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 78 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 16-வது ஓவரை சிறப்பாக வீசிய குல்தீப் யாதவ், 5 ரன்களை மட்டுமே கொடுத்து தெவாடியா விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்த நேரத்தில் நோர்க்கியா வீசிய ஓவரில் மில்லர் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை விளாசினார். 21 பந்துகளில் அரை சதம் அடித்த மில்லர், அடுத்த ஓவரிலேயே 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆட்டம் முடிந்தது என்று நினைத்தால், ரசிக் சலாம் வீசிய 19-வது ஓவரில் சாய் கிஷோர் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விரட்டி மிரட்டினார். இதே ஓவரின் கடைசிப் பந்தில் போல்டானாலும், கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையை உருவாக்கிச் சென்றார்.

கடைசி ஓவரின் முதலிரு பந்துகளை ரஷித் கான் பவுண்டரிகளுக்கு விரட்டினார். 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். கடைசிப் பந்தில் பவுண்டரி எடுத்தால், சமன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முகேஷ் குமார் கடைசிப் பந்தை சரியாக யார்க்கரில் வீசியதால், நேராக லாங் ஆன் ஃபீல்டரிடம் சென்றது. கடைசிப் பந்து வரை போராடிய குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. தில்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in