சிட்னி டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ராவின் ஸ்கேன் முடிவுகள் மற்றும் இந்தியா நிர்ணயிக்கப்போகும் இலக்கைப் பொறுத்து சிட்னி டெஸ்டின் முடிவு அமையப்போகிறது.
சிட்னி டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்
ANI
2 min read

சிட்னி டெஸ்ட் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா விலகியதையடுத்து, கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்றுக்கொண்டார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் பும்ரா. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜாவை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடங்கிய நான்காவது ஓவரிலேயே லபுஷேன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் பும்ரா.

இந்தச் சரிவிலிருந்து மீள்வதற்குள் சாம் கோன்ஸ்டஸ் மற்றும் டிராவிஸ் ஹெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி மிரட்டினார் சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் கூட்டணி அமைத்தார்கள். 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தார்கள். உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியை பிரித்தார் பிரசித் கிருஷ்ணா.

உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவரை மட்டுமே வீசிய பும்ரா, களத்திலிருந்து வெளியேறினார். அவர் வீசிய ஓவரிலும் பந்தின் வேகம் மணிக்கு 120, 130 வேகத்தில் தான் இருந்தது. உடனடியாகக் களத்திலிருந்து வெளியேறினார்.

இதன்பிறகு சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, ஜடேஜா மட்டுமே பந்துவீசினார்கள். வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி கூட்டணி பெரிய கூட்டணியாக மாறவிருந்த தருணத்தில் மீண்டும் கூட்டணியைப் பிரித்தார் பிரசித் கிருஷ்ணா. கேரி 21 ரன்களுக்கு போல்டானார்.

அறிமுக வீரர் வெப்ஸ்டர் அரை சதம் அடித்து நம்பிக்கையளித்தார். இந்தத் தொடரில் தலைவலியாக இருந்த கம்மின்ஸ் விக்கெட்டை நிதிஷ் ரெட்டி எடுத்தார். அடுத்த பந்தில் ஸ்டார்கையும் காலி செய்தார் நிதிஷ் ரெட்டி. அரை சதம் அடித்த வெப்ஸ்டரையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.

நேதன் லயன், ஸ்காட் போலண்ட் கடைசி விக்கெட்டுக்கு சிக்கல் கொடுப்பார்களா என்று பார்த்தபோது, 15 ரன்களை மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்திருந்தபோது, போலண்டை சிராஜ் போல்ட் செய்தார். பும்ரா இல்லாமல் கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி.

இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தவுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

4 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா களமிறங்கியது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ஜெயிஸ்வால் 4 பவுண்டரிகள் விளாசி, தாக்குதல் ஆட்டத்துக்கான முனைப்பு தொடக்க பேட்டர்களிடம் வெளிப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்தியா 42 ரன்கள் சேர்த்தது. சூழலை உணர்ந்த பேட் கம்மின்ஸ், ஸ்டார்க்கை நிறுத்தி போலண்டை அழைத்தார்.

போலண்ட் வந்த பலனாக கேஎல் ராகுல், ஜெயிஸ்வால், கோலி ஆகியோர் ஆட்டமிழந்தார்கள். அடுத்து வந்த ரிஷப் பந்த் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த ஆடுகளத்தில் நீண்ட நேரம் விளையாடுவதைக் காட்டிலும் ரன் எடுப்பது முக்கியம் என்பதை உணர்ந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார். இதே பாணியில் விளையாட முயற்சித்த ஷுப்மன் கில், வெப்ஸ்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் டி20 பாணியிலான அதிரடி ரிஷப் பந்துக்கு கைக்கொடுத்தது. 29 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜாவும், நிதிஷ் ரெட்டியும் இரண்டாவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தால் போதும் எனத் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிதிஷ் ரெட்டி, பந்தை உள்வட்டத்துக்கு வெளியே தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.

ஆட்டம் முடிவதற்கு சற்று முன்பு ஜடேஜா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்டீவ் ஸ்மித் தவறவிட்டார். இரண்டாவது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டை இழக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய நாள் ஆட்டத்தில் மட்டும் 15 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜஸ்பிரித் பும்ராவின் ஸ்கேன் முடிவுகள் மற்றும் இந்தியா நிர்ணயிக்கப்போகும் இலக்கைப் பொறுத்து சிட்னி டெஸ்டின் முடிவு அமையப்போகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in