ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் 92.97 மீ. தூரம் வீசி புதிய சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் விளையாட்டின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
இதில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீ. தூரம் வீசி புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
முன்னதாக, 2008 ஒலிம்பிக்ஸில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் 90.57 மீ. தூரம் வீசியதே ஒலிம்பிக்ஸ் சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்து புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்துள்ளார் அர்ஷத் நதீம்.
மேலும், ஒட்டுமொத்த பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்த அர்ஷத் நதீம் பாகிஸ்தானின் 32 வருட பதக்கக் கனவை நிறைவேற்றியுள்ளார். பாகிஸ்தான் கடைசியாக 1992 ஒலிம்பிக்ஸில் பதக்கத்தை வென்றது.
பாகிஸ்தான் சார்பாக நடப்பாண்டு ஒலிம்பிக்ஸில் மொத்தம் 7 வீரர்களே பங்கேற்ற நிலையில் அர்ஷத் நதீமைத் தவிர மற்ற அனைவரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
ஆனால், அர்ஷத் நதீம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஒரு சிறப்பானச் சாதனையைச் செய்துள்ளார்.
இந்த ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தானின் முதல் பதக்கம் இது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 53-வது இடத்தைப் பிடித்தது.
இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்துடன் 63-வது இடத்தில் உள்ளது.