பாகிஸ்தான் டெஸ்ட்: இங்கிலாந்து படைத்த சாதனைகள்!

பாகிஸ்தானுக்கு எதிராக 800 ரன்களை அடித்த முதல் அணி..
பாகிஸ்தான் டெஸ்ட்: இங்கிலாந்து படைத்த சாதனைகள்!
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151 ரன்கள் அடித்தார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் எடுத்தனர்.

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி படைத்த சாதனைகளின் விவரம்

* பாகிஸ்தானுக்கு எதிராக 800 ரன்களை அடித்த முதல் அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

* பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக, 2009-ல் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 765 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

* ஜோ ரூட் - ஹாரி புரூக் கூட்டணி 454 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒரு கூட்டணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கூட்டணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்துள்ளது.

* ஜோ ரூட் - ஹாரி புரூக் கூட்டணி 454 ரன்கள் சேர்த்தது, 4-வது விக்கெட்டுக்காக களமிறங்கி ஒரு ஜோடியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக அமைந்தது.

* ஒரே இன்னிங்ஸில் இரு வீரர்கள் 250 ரன்களுக்கு மேல் அடிப்பது இது 3-வது முறை.

* இரண்டு முறை 300-க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்த முதல் இங்கிலாந்து கூட்டணி. ஏற்கெனவே, இந்த ஜோடி கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் அடித்தது.

* 310 பந்துகளில் முச்சதம் அடித்த புரூக், அதிவேகமாக முச்சதம் அடித்த 2-வது வீரர் மற்றும் வேகமாக முச்சதம் அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.

* 1990-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் புரூக்.

* டெஸ்டில் 3-வது முறையாக 800 ரன்களைக் கடந்து இங்கிலாந்து சாதனை. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 4 முறை 800-க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது, அதில் மூன்று முறை இந்த மைல்கல்லை எட்டி இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in