தொடர்ச்சியாக 5-வது தோல்வி: மீண்டும் புதிய கேப்டனைத் தேடுமா பாகிஸ்தான்?
@TheRealPCB

தொடர்ச்சியாக 5-வது தோல்வி: மீண்டும் புதிய கேப்டனைத் தேடுமா பாகிஸ்தான்?

2021-க்கு பிறகு, சொந்த மண்ணில் முதல் வெற்றிக்காக இன்னும் போராடி வருகிறது பாகிஸ்தான் அணி.
Published on

பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் அந்த அணி புதிய கேப்டனைத் தேடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி.

இத்தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது பாகிஸ்தான் அணி. இத்தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

சொந்த மண்ணிலும் தொடர்ந்து தடுமாறி வரும் பாகிஸ்தான் அணி கடைசியாக 2021 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றது. இதன்பிறகு, சொந்த மண்ணில் முதல் வெற்றிக்காக இன்னும் போராடி வருகிறது.

ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடிய 5 டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் பிறகு நவம்பர் 2023-ல் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் அவர் கேப்டனாக தொடருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் கடைசி 5 டெஸ்டுகளின் முடிவுகள்

* வங்கதேசத்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

* வங்கதேசத்துக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

logo
Kizhakku News
kizhakkunews.in