
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து முஹமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனாக ஷஹீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆஸம் ராஜினாமா செய்த பிறகு, ஒருநாள் அணியின் கேப்டனாக முஹமது ரிஸ்வான் கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2-1 என ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான். தென்னாப்பிரிக்க மண்ணில் 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
2025-ல் தான் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் தடுமாறியது. சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிச் சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
அடுத்து சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. மேலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது பாகிஸ்தான். நியூசிலாந்து மண்ணிலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது.
தென்னாப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தானுக்குப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து, டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் தேர்வுக் குழு மற்றும் வெள்ளைப் பந்து தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கானக் காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புதிய கேப்டனாக ஷஹீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 4, நவம்பர் 6 மற்றும் நவம்பர் 8 ஆகிய நாள்களில் ஃபைசலாபாதில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஃப்ரிடி அணியை வழிநடத்தவுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார் அஃப்ரிடி. அதில் பாகிஸ்தான் அணி 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
Mohammad Rizwan | PCB | Pakistan Cricket | Shaheen Afridi | Shaheen Shah Afridi | Mike Hesson |