ஷஹீன் அஃப்ரிடி படைத்த உலக சாதனை! | Shaheen Afridi

ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஸ்டிரைக் ரேட் (குறைந்தபட்சம் 100 விக்கெட்டுகள்) கொண்டிருப்பவர் என்ற சாதனையையும்...
ஷஹீன் அஃப்ரிடி படைத்த உலக சாதனை! | Shaheen Afridi
ANI
2 min read

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 65 ஆட்டங்களின் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஷஹீன் அஃப்ரிடி படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தொடர்ந்து, இரு அணிகளும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் ஒருநாள் ஆட்டம் ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முஹமது ரிஸ்வான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எவின் லீவிஸ், கேப்டன் ஷை ஹோப், ராஸ்டன் சேஸ் ஆகியோர் அரை சதம் அடித்தார்கள். பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ரிஸ்வான் அரை சதம் அடித்தார். ஹசன் நவாஸ் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

முதல் ஒருநாள் ஆட்டத்தின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஷஹீன் அஃப்ரிடி புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை 65 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஃப்ரிடி 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் 65 ஒருநாள் ஆட்டங்களின் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் அஃப்ரிடியே முதலிடம். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் தலா 129 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.

அதிக விக்கெட்டுகள்

66 ஒருநாள் ஆட்டங்களுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையிலும் அஃப்ரிடியே முதலிடத்தை வகிக்கப்போகிறார். 67 ஒருநாள் ஆட்டங்கள் முடிவில் மிட்செல் ஸ்டார்க் 133 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அஃப்ரிடி இதை முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சிறந்த பந்துவீச்சு ஸ்டிரைக் ரேட்

முழு உறுப்பினர் நாடுகளைப் பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஸ்டிரைக் ரேட் (குறைந்தபட்சம் 100 விக்கெட்டுகள்) கொண்டிருப்பவர் என்ற சாதனையையும் அஃப்ரிடி படைத்துள்ளார். முஹமது ஷமியின் 25.85 ஸ்டிரைக் ரேட்டே சிறந்த ஸ்டிரைக் ரேட்டாக இருந்தது. இதை முறியடிக்கும் வகையில் அஃப்ரிடியின் ஸ்டிரைக் ரேட் 25.46 ஆக உள்ளது.

350 சர்வதேச விக்கெட்டுகள்

இந்த ஆட்டத்தின் மூலம், மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் அஃப்ரிடி. சர்வதேச கிரிக்கெட்டில் 177 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 351 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 11-வது இடத்தில் உள்ளார் ஷஹீன் அஃப்ரிடி.

Shaheen Afridi | Pakistan | Pakistan West Indies | Pakistan Tour of West Indies | Mitchell Starc | Rashid Khan | Pakistan ODI | West Indies ODI

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in