டபிள்யுசிஎல் போட்டியில் இனி பங்கேற்க மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம் | WCL

விளையாட்டு உணர்வைக் குறைத்து மதிப்பிடும் போட்டிகளில்...
டபிள்யுசிஎல் போட்டியில் இனி பங்கேற்க மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம் | WCL
1 min read

உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இனி பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் (டபிள்யுசிஎல்) போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. யுவ்ராஜ் சிங் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. முஹமது ஹஃபீஸ் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்கியது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பதில் தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் விரிசலில் உள்ளது.

இந்நிலையில், டபிள்யுசிஎல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டோம் என இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இதனால், இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அரையிறுதிச் சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் மோதவிருந்தன. ஆனால், அரையிறுதியிலும் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. ஏபி டி வில்லியர்ஸின் அதிரடியான சதத்தால் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்நிலையில், டபிள்யுசிஎல் போட்டியில் பாகிஸ்தான் இனி பங்கேற்காது என்ற முடிவை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தலைமையிலான 79-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில், விளையாட மறுப்பு தெரிவித்த அணியான இந்தியாவுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது பாரபட்சமானது எனது குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் மற்றும் விளம்பர நலன்கள் போட்டியில் தலையிடுவதை அனுமதித்ததற்காகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாடியுள்ளது.

மேலும், "ஆட்டம் ரத்து செய்யப்பட்டது கிரிக்கெட்டின் அடிப்படையில் அல்ல. குறிப்பிட்ட தேசியவாதக் கதையாடல்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது. சர்வதேச விளையாட்டு சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செய்தியை இது அனுப்புகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உணர்வைக் குறைத்து மதிப்பிடும் போட்டிகளில் தங்களுடைய வீரர்கள் பங்கெடுப்பதை இனி அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

India Pakistan | WCL | World Championship of Legends | Ind v Pak | India v Pakistan | India vs Pakistan | Ind vs Pak

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in