
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஓர் ஆட்டத்தில் வென்றிருந்தன. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷை ஹோப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார்.
இலக்கை விரட்டி விளையாடிய பாகிஸ்தான் 92 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆனார்கள். இவர்களில் 4 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸால் வீழ்த்தப்பட்டார்கள். அற்புதமாகப் பந்துவீசிய ஜேடன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக 1991-க்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
மேலும், மேற்கிந்தியத் தீவுகளில் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் தொடர்களையும் வென்று மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1981-1990-ல் இந்தச் சாதனையை நிகழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்.
92 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 10-வது முறையாக 100 ரன்களுக்கு கீழ் சுருண்டுள்ளது.
Pakistan | West Indies | Windies | ODI | ODI Series | Jayden Seales | Shai Hope | Pakistan West Indies | Pakistan Tour of West Indies | Pakistan ODI | West Indies ODI