ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் பெர்த் நகரில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
அதிகபட்சமாக சீன் அப்பாட் 30 ரன்கள் எடுக்க, ஆஸி அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தது அயுப் மற்றும் அப்துல்லா ஷபிக் கூட்டணி. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 137 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணி இந்த ஆட்டத்தில் 84 ரன்கள் சேர்த்தது.
அயுப் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், அப்துல்லா ஷபிக் 37 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் பாபர் ஆஸம் 28 ரன்களும், முஹமது ரிஸ்வான் 30 ரன்களும் எடுத்து பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவினர்.
23.1 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், கடைசியாக 2002-ல் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான் அணி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை (2-1 என்ற கணக்கில்) வென்று சாதனை படைத்துள்ளது.