
இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட, இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களும் இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்து வெற்றிக்கு 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் முஹமது சிராஜின் கடைசி பந்தில் இங்கிலாந்து தொடக்க பேட்டர் ஸாக் கிராலி ஆட்டமிழந்தார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது.
நான்காவது நாள் ஆட்டத்தில் அரை சதம் அடித்த பென் டக்கெட், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உயிரைக் கொடுத்து பந்துவீசி வந்த முஹமது சிராஜ், இங்கிலாந்து கேப்டன் ஆலி போப்பை முதல் இன்னிங்ஸை போலவே எல்பிடபிள்யு செய்தார். 106 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது.
ஜோ ரூட் களத்தில் நிற்க, ஹாரி புரூக் வழக்கமான அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 19 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரசித் கிருஷ்ணா பந்தை மடக்கி அடிக்கப் பார்த்தார். டீப் ஃபைன் லெக்கில் சிராஜ் கைகளுக்குப் பந்து சென்றது. பந்தைப் பிடித்த சிராஜ், பவுண்டரி எல்லையைக் கவனிக்காமல் கால்களால் எல்லைக் கோட்டைத் தொட்டுவிடுவார். வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் புரூக்.
நான்காவது நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு அதிரடியைத் தொடர்ந்த ஹாரி புரூக் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். இங்கிலாந்து 200 ரன்களை கடக்க, ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. ஜோ ரூட்டும் 81-வது பந்தில் அரை சதம் அடித்தார்.
இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கும் விதமாக விளையாடிய புரூக் 91 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்து 300 ரன்களை தொட்டது. புரூக் 111 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை 4-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது.
தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு 57 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் வெற்றியின் விளிம்பில் இருந்தது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவ முன்வந்தது. முஹமது சிராஜ் தொடர்ச்சியாகச் சிக்கல்களைக் கொடுக்க ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் திணறினார்கள். ரன் குவிப்பது மிகச் சவாலானதாக இருந்தது. தேநீர் இடைவேளையில் 98 ரன்களில் இருந்த ஜோ ரூட், டெஸ்டில் தனது 39-வது சதத்தை அடித்தார்.
30 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நெருக்கடியால் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் கிரீஸைவிட்டு இறங்கி வந்து விளையாடப் பார்த்து பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். ஜேமி ஸ்மித்தும் அச்சத்தில் இருந்ததை அவருடைய பேட்டிங்கில் உணர முடிந்தது. இதே நெருக்கடியில் சதமடித்திருந்த ஜோ ரூட்டும் 105 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து பக்கம் இருந்த ஆட்டம் சமநிலைக்குத் திரும்பியது. பந்துக்குப் பந்து பரபரப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தோள்பட்டை காயம் காரணமாக ஓவல் டெஸ்டிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸ், தேவைப்படும் பட்சத்தில் பேட்டிங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆட்டத்தில் இது கூடுதல் சுவாரஸ்யத்தைக் கூட்டியது.
77-வது ஓவரின்போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பிறகு, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு மைதானத்தில் ஆய்வை மேற்கொண்ட நடுவர்கள், நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்கள்.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 10.2 ஓவர்கள் பந்துவீசிய இந்தியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 22 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளது.
நான்காவது நாளில் முடிந்திருக்க வேண்டிய கடைசி டெஸ்ட், பரபரப்பான கட்டத்தில் மழையால் தள்ளிப்போயுள்ளது. மிக நெருக்கமாக நடைபெற்று வந்த இந்தத் டெஸ்ட் தொடர், மழையால் மீண்டுமொரு முறை பரபரப்பான கடைசி நாளுக்குச் சென்றுள்ளது.
Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Mohammed Siraj | Prasidh Krishna | Joe Root | Harry Brook | Shubman Gill | Jacob Bethell | Jamie Smith | Akash Deep | India Tour of England | India England Series | 5th Test | Oval Test | Day 4 | Day 5