கெஜ்ரிவால் கைது: இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி!

"அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டவிரோதமான அரசியல் கைது நடவடிக்கைக்கு எதிராக இண்டியா கூட்டணி போராட்டம் நடத்தவுள்ளது."
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து தில்லியில் இண்டியா கூட்டணி சார்பில் வரும் 31-ல் மாபெரும் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளன.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மார்ச் 28 வரை விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவரது கைது நடவடிக்கைக்கு ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தார்கள். இந்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டவிரோதமான அரசியல் கைது நடவடிக்கைக்கு எதிராக இண்டியா கூட்டணி போராட்டம் நடத்தவுள்ளது. மார்ச் 31-ல் இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மாபெரும் மெகா பேரணியை நடத்தவுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் துணை நிற்கவும், நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவும் லட்சக்கணக்கான மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி ராம்லீலா மைதானத்தில் திரள்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in