.png?rect=0%2C0%2C1176%2C662&w=480&auto=format%2Ccompress&fit=max)
துப்பாக்கிச் சுடுதலில் கண்களுக்குத் தேவையான சிறப்பு லென்ஸ், கண்ணாடி உட்பட எந்த நவீன கருவிகளும் இல்லாமல் வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற யூசஃப் டிகெச் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றது சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை. இதே பிரிவில் துருக்கி இணை 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இந்த ஆட்டத்தில் கலந்துகொண்ட துருக்கி வீரர் யூசஃப் டிகெச் கண்களுக்குத் தேவையான சிறப்பு லென்ஸ், கண்ணாடி உட்பட எந்த நவீன கருவிகளும் இல்லாமல் சாதாரணமாக வந்து கையை பாக்கெட்டில் வைத்தபடி பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏனென்றால் பெரும்பாலான துப்பாக்கிச் சுடும் வீரர்கள் காதுகளில் சிறப்பு கருவிகள், சிறப்பு லென்ஸ், கண்ணாடி உட்பட பாதுகாப்பு கருவிகள் மற்றும் சில நவீன கருவிகள் என வித்தியாசமான தோற்றத்தில் களம் இறங்குவார்கள்.
ஆனால், யூசஃப் டிகெச் இதுபோன்ற எந்த நவீன கருவிகளும் இல்லாமல் வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அவரது செயல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 51 வயதான யூசஃப் டிகெச் 2008 ஒலிம்பிக்ஸ் முதல் தொடர்ச்சியாக 5-வது முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார்.
தனது முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை இந்தாண்டு வென்றார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான யூசஃப் டிகெச் துப்பாக்கிச் சுடுதல் மீது கொண்ட ஆர்வத்தால் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு, தற்போது ஒலிம்பிக்ஸில் சாதித்துள்ளார்.