ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 அன்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
தொடக்க விழா, முதல்முறையாக விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.
ஈபிள் கோபுரம் அருகே செயின் நதிக்கரையில் வித்தியாசமான முறையில் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்று அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது.
இந்த ஒலிம்பிக்ஸில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பதக்கப் பட்டியலில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா.
அடுத்ததாக, 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்தைப் பிடித்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே 3,4,5 ஆகிய இடங்களைப் பிடித்தன.
இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் 71-வது இடத்தைப் பிடித்தது.
கடந்த 2020-ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா.
இதைத் தொடர்ந்து மீண்டும் இம்முறை பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா.
இந்நிலையில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன.
இதில், ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில், இந்தியா சார்பில் மனு பாக்கரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் ஓய்வு பெற்ற கோல் கீப்பர் ஸ்ரீஜேஷும் தேசிய கொடியை ஏந்தி வந்து அணி வகுப்பு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 2028 ஒலிம்பிக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.