
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி இன்று தகுதி சுற்றில் விளையாடியது.
இதில், ரமிதா - அர்ஜூன் இணையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும் பங்கேற்றனர்.
இவர்கள், புள்ளிகள் பட்டியலில் முறையே 6-வது மற்றும் 12-வது இடத்தைப் பிடித்து தகுதி சுற்றிலேயே வெளியேறினர். புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.
அடுத்ததாக, இதே பிரிவில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி களமிறங்க உள்ளது.
மேலும், பாய்மர படகுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் 4-வது இடத்தைப் பிடித்து நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் நாளை அவருக்கு மற்றொரு வாய்ப்புள்ளது. நாளை நடைபெறும் ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் பல்ராஜ் 4-வது வீரராக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவார்.