பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நூலிழையில் இந்தியா தவறவிட்ட பதக்கங்களைக் குறித்து பார்போம்.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. ஆனால், ஒலிம்பிக்ஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பதே மிக கடினம்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒலிம்பிக்ஸ் தொடங்கியக் காலக்கட்டத்தில் இருந்து 2004 வரை அதிகபட்சமாக 2 பதக்கங்களையே வென்றது.
இதனை மாற்றும் வகையில் 2008-ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து 2012-ல் 6 பதக்கங்களும், 2016-ல் 2 பதக்கங்களும், 2020-ல் அதிகபட்சமாக 7 பதக்கங்களும் கிடைத்தன.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு அதிகப் பதக்கங்கள் கிடைத்தது 2020-ல் தான்.
இந்நிலையில் இந்த சாதனையை நடப்பாண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
ஆனால், 6 வாய்ப்புகளை நூழிலையில் தவறவிட்ட இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
* மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 25 மீ. பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்.
* 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
* மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார் மீராபாய் சானு.
* துப்பாக்கிச் சுடுதல் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அனந்த் ஜீத் சிங் - மகேஷ்வரி சௌஹான் இணை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.
* ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜ் - அங்கிதா இணை 4-வது இடத்தைப் பிடித்தது.
* ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார் இந்திய வீரர் லக்ஷயா சென்.
இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.