ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் வில்வித்தையின் தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தியா சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் வில்வித்தையின் தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
மகளிர் தனிநபர் தரவரிசை சுற்று பிற்பகல் 1 மணிக்கும், ஆடவர் தனிநபர் தரவரிசை சுற்று மாலை 5.45 மணிக்கும் தொடங்குகிறது.
இதன் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த சுற்றுகள் நடைபெறும். இந்தியாவில் இருந்து 6 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
ஆடவர் அணியில் தீரஜ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் மகளிர் அணியில் பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் வில்வித்தையில் நடைபெறும் 5 பிரிவுகளிலும் போட்டியிட உள்ளனர்.
தகுதி சுற்றில் 128 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். புள்ளிகள் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுகள் நடைபெறும்.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியா பதக்கம் வென்றது இல்லை.