மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் மிகவும் நிதானமாக விளையாடியது நியூசிலாந்து அணி. சூஸி பேட்ஸ் 29 பந்துகளில் 28 ரன்கள், ஜார்ஜியா 14 பந்துகளில் 17 ரன்கள், சோஃபி டிவைன் 25 பந்துகளில் 19 ரன்கள், புரூக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினர். பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் சிறப்பான பந்துவீச்சில் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். முனீபா அலி 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் இரட்டை இலக்கு ரன்களைக் கூட எடுக்கவில்லை. நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நியூசிலாந்து அணி 8 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியின் வெற்றியால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.
2023-ல் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.