
டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் தனது குடும்பத்தினருடன் செர்பியாவிலிருந்து கிரீஸுக்குக் குடிபெயர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செர்பியாவில் கடந்த டிசம்பரில் ரயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தார்கள். இதைத் தொடர்ந்து, அரசின் ஊழலை எதிர்த்து அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அரசாங்கத்துக்கு எதிரான மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு செர்பியாவைச் சேர்ந்த 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நோவக் ஜோகோவிச் வெளிப்படையாக ஆதரவைத் தெரிவித்து வருகிறார். காயமடைந்த மாணவர் ஒருவருக்காக ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியைச் சமர்ப்பித்ததாக ஜோகோவிச் அறிவித்தார். மாணவர்களே சாம்பியன்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்வெட்டரை பெல்கிரேட் கூடைப்பந்து விளையாட்டின்போது அணிந்திருந்தார். போராட்டப் புகைப்படங்களை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
இதன் காரணமாக அரசு சார்ந்த வட்டாரங்களிலிருந்து ஜோகோவிச்சுக்கு அழுத்தம் வந்ததாகத் தெரிகிறது. எனவே, குடும்பத்துடன் செர்பியாவிலிருந்து கிரீஸூக்குக் குடிபெயர ஜோகோவிச் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தனது இரு குழந்தைகளையும் ஏதேன்ஸில் உள்ள செயின்ட் லாரன்ஸ் கல்லூரி எனும் கல்வி நிறுவனத்தில் சேர்க்க ஜோகோவிச் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏதென்ஸில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், கிரீக் கோல்டன் விசாவுக்கு ஜோகோவிச் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது.
ஜோகோவிச் குடும்பத்தினரால் நடத்தப்படும் பெல்கிரேட் ஓபன் இனி ஏதென்ஸில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். போதிய வசதிகள் இல்லாததால் இந்த முடிவு எனக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் மீண்டும் பெல்கிரேடுக்கே இப்போட்டி திரும்பலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Novak Djokovic | Serbia | Greece | Athens |