கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர்: சிஎஸ்கேவுக்கு 3-வது வெற்றி!

கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட, 10 ரன்களுடன் ஸ்டிரைக்கில் இருந்த தோனி...
கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர்: சிஎஸ்கேவுக்கு 3-வது வெற்றி!
ANI
2 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயருக்குப் (காயம்) பதில் மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டார். சிஎஸ்கேவில் சாம் கரண், ஷைக் ரஷீத், தீபக் ஹூடா ஆகியோருக்குப் பதில் டெவான் கான்வே, உர்வில் படேல், ஆர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்கள்.

கேகேஆரில் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அன்ஷுல் கம்போஜிடம் வீழ்ந்தார். ரஹானேவும் சுனில் நரைனும் பவர்பிளேயில் சற்று அதிரடி காட்ட, அந்த அணி 6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தது.

நூர் அஹமதை 8-வது ஓவரில் அறிமுகம் செய்தார் எம்எஸ் தோனி. முதல் பந்திலேயே சுனில் நரைனை (26) ஸ்டம்பிங் முறையில் வீழத்தினார் நூர் அஹமது. தோனியின் அற்புதமான கேட்சில் அங்ரிஷ் ரகுவன்ஷி இதே ஓவரில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை இழந்ததால், 10 ஓவர்கள் முடிவில் 87 ரன்கள் மட்டுமே எடுத்தது கேகேஆர்.

சுழற்பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்த ரஹானே 48 ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பிய ஆண்ட்ரே ரஸல் மளமளவென சிக்ஸர்களும் பவுண்டரிகளாக அடித்து 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நூர் அஹ்மது வீசிய 17-வது ஓவரில் ஆட்டமிழந்ததால், கடைசி நேர ஆக்ரோஷமான ஆட்டத்தில் ரஸல் இல்லை. நூர் அஹ்மது இருந்த ஃபார்முக்கு 19-வது ஓவரையும் அவரையே வீசச் சொன்னார் தோனி. ரிங்கு சிங் விக்கெட்டையும் வீழ்த்தி நூர் அஹ்மது அசத்தினார்.

மதீஷா பதிரனா கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் பாண்டே 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கேவில் அதிகபட்சமாக நூர் அஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. இரண்டாவது பந்திலேயே ஆயுஷ் மாத்ரே டக் அவுட் ஆனார். புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட உர்வில் படேல் முதல் 7 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து தெறிக்கவிட்டார். ஆனால், மற்றொரு தொடக்க பேட்டரான டெவான் கான்வேவும் மொயீன் அலி பந்தில் டக் அவுட் ஆனார். 4-வது பேட்டராக அஸ்வின் களமிறக்கப்பட்டார்.

அடித்தால் சிக்ஸர், பவுண்டரி என விளையாடி 31 ரன்கள் எடுத்த உர்வில் படேல் 11-வது பந்தில் ஹர்ஷித் ராணாவிடம் வீழ்ந்தார். அஸ்வின் முன்கூட்டியே களமிறங்கியதும் பலனளிக்கவில்லை. 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருந்த ரவீந்திர ஜடேஜாவும் வருண் சக்ரவர்த்தி சுழலில் பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தாலும், 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே.

ஷிவம் துபே மற்றும் டியவால்ட் பிரேவிஸ் பொறுப்புடன் விளையாடி கூட்டணி அமைத்தார்கள். 10 ஓவர்களில் சிஎஸ்கே 93 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 87 ரன்கள் தேவைப்பட்டபோது, வைபவ் அரோரா 11-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் பிரேவிஸ் தலா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் நொறுக்கி 30 ரன்கள் எடுத்தார். இவரும் 22 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். சிஎஸ்கேவின் வெற்றிக்கு 54 பந்துகளில் 57 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

13-வது ஓவரில் வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு வர பிரேவிஸ் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நம்பிக்கைக்குரிய கடைசி கூட்டணி என்பதால், ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனி இன்னிங்ஸை கடைசி வரை எடுத்துச் செல்ல முயற்சித்தார்கள். துபே இடையில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க 24 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

சுழற்பந்துவீச்சாளர்களிடம் தோனி திணறுவதாகச் சொல்லப்படும் நிலையில், குறிப்பாக வருண் சக்ரவர்த்திக்கு எதிராக தடுமாறியுள்ள நிலையில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஓவர்களை கூடுதலாக வைத்திருக்கலாம் கேகேஆர். இவர்கள் இருவர் ஓவரையும் சேர்த்து மொத்தமே 4 பந்துகளை மட்டுமே தோனி எதிர்கொள்ள நேர்ந்தது.

கடைசி இரு ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டபோது, துபே ஒரு சிக்ஸர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நூர் அஹமதுவும் இதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட, 10 ரன்களுடன் தோனி ஸ்டிரைக்கில் இருந்தார். ரஸல் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி ஆட்டத்தின் முடிவை உறுதி செய்தார் தோனி. இரண்டாவது பந்தில் ரன் எடுக்க மறுத்த தோனி, மூன்றாவது பந்தில் 1 ரன் எடுத்து கம்போஜிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சற்று பதற்றமாக இருந்தது. இருந்தாலும், கம்போஜ் மிட் ஆன் தலைக்கு மேல் தூக்கி பவுண்டரி அடித்து சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்த சிஎஸ்கே 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எம்எஸ் தோனி 17 ரன்கள் எடுத்தார். 2 புள்ளிகளைப் பெற்றாலும் சிஎஸ்கே பெறும் மூன்றாவது வெற்றி என்பதால் மொத்தமே 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in