2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கடந்த அக்.15 அன்று முல்தானில் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்கள் எடுத்தார். பாபர் ஆஸமுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட இவர் தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 114 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சல்மான் அகா 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷிர் 4 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

297 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சஜித் கான் மற்றும் நோமன் அலியின் அபாரமான பந்துவீச்சில் 33.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணியில் சஜித் கான் மற்றும் நோமன் அலி மட்டுமே பந்துவீசினார்கள். இதில் நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சஜித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இவர்கள் இருவரும் சேர்ந்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது இன்னிங்ஸிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே, இந்த டெஸ்டில் சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என அனைத்து விக்கெட்டுகளையும் இவ்விருவருமே வீழ்த்தியுள்ளனர்.

ஒரு டெஸ்டில் அனைத்து விக்கெட்டுகளையும் இரு பந்துவீச்சாளர்களே வீழ்த்துவது இது 7-வது முறையாகும். ஏற்கெனவே 1956-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில், பாகிஸ்தான் வீரர்கள் ஃபாஸல் மஹ்மூத் மற்றும் கான் முஹமது ஆகியோர் இணைந்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடந்த டெஸ்டில் இதே முல்தான் மைதானத்தில் 500 ரன்கள் அடித்து, 800 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த டெஸ்டில் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது பாகிஸ்தான் அணி. கடைசி டெஸ்ட் அக்.24 அன்று தொடங்குகிறது.

அதேபோல், 2021-க்கு பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in