
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து பேசுகையில், மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளை பிசிசிஐ பின்பற்றுவதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் குரூப் சுற்றில் செப்டம்பர் 14 அன்று மோதுகின்றன. குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதியடைந்தால் இரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 21-ல் துபாயில் மோத வாய்ப்புள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தால் சூப்பர் 4 சுற்றில் அதன் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் துபாயில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் இரு அணிகளும் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஒரு போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல்முறை என்பதால், இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா மௌனம் கலைத்துள்ளார்.
"பிசிசிஐயை பொறுத்தவரை, மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவில் இல்லாத நாடுகளுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசால் எந்தக் கட்டுப்பாடுகளும் வகுக்கப்படவில்லை. எனவே, பன்னாட்டுப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா விளையாட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரைப் பொறுத்தவரை, நமக்கு விரோதமான நாடுகளுடன் விளையாடப் போவதில்லை.
எனவே, மத்திய அரசு வகுத்த கொள்கையைப் பின்பற்றுகிறோம். இதைப் பின்பற்றுவதில் பிசிசிஐ-க்கு மகிழ்ச்சியே. கிரிக்கெட் மட்டுமில்லாமல் இதர விளையாட்டுகளையும் மனதில் கொண்டு கொள்கைகள் மிகவும் நன்றாகவே வகுக்கப்பட்டுள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது ஐசிசி நடத்தும் போட்டியாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் விளையாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பிஃபா அல்லது ஏஎஃப்சி போட்டி அல்லது ஏதோ ஒரு போட்டியாக இருக்கட்டும். அல்லது பன்னாடுகளைக் கொண்ட தடகளப் போட்டியாக இருக்கட்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் இந்தியா விளையாடாவிட்டால், சம்பந்தப்பட்ட இந்தியக் கூட்டமைப்பு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டியின் வீரர்களுக்கு எதிரானதாக அது அமைந்துவிடும்.
உதாரணத்துக்கு, தடகளத்தில் நமக்கு விரோதமான நாட்டின் வீரர் ஒருவருடன் விளையாட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதற்காக அப்போட்டியில் பங்கேற்காமல் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சூழலில் இந்திய தடகள அமைப்பு அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். நீரஜ் சோப்ராவையே உதாரணமாக எடுத்துக்கொள்வோமே. அவரால் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். அது வீரர்கள் நலனில் தீங்கை உண்டாக்கும்.
இவை அனைத்தையும் இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டே, கொள்கைகளை வகுத்திருக்கும். கிரிக்கெட் மட்டுமில்லாமல் மற்ற விளையாட்டுகளில் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதை மத்திய அரசு அனுமதிக்கிறது" என்றார் தேவஜித் சைகியா.
Ind v Pak | BCCI | Ind vs Pak | Asia Cup | Asia Cup T20 | Devajit Saikia