இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால்...: பிசிபி எச்சரிக்கை!

"இதுவரை எழுத்துப்பூர்வமாக எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துப்பூர்வமாக ஏதேனும் கிடைத்தால்...": பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்
2 min read

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி அடுத்தாண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி லாகூரில் மட்டும் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பளித்தது. மேலும், ஒவ்வொரு ஆட்டம் முடிந்தபிறகும், இந்திய அணி இந்தியா சென்று வருவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆனால், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலும் பங்கேற்கும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. தனது ஆட்டங்களை துபையில் விளையாட இந்தியா தயாராக உள்ளது. ஆனால் பாகிஸ்தானால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஷின் நாக்வி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், நாங்கள் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று விளையாடலாமா வேண்டாமா என்பதை எங்கள் அரசாங்கம் தான் முடிவெடுக்கும் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் பேசினார்.

"எழுத்துப்பூர்வமாக இதுவரை எனக்கு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துப்பூர்வமாக ஏதேனும் கிடைத்தால், நிச்சயமாக அதை நான் தங்களிடமும் (ஊடகங்கள்), அரசிடமும் பகிர்வேன். இதன்பிறகு, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என இந்திய ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக செய்திகள் வருகின்றன. எங்களுக்குத் தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்றால், அதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை ஹைப்ரிட் முறை குறித்து நான் எதுவும் கேட்கவில்லை. எதையும் கேட்பதற்குத் தயாராகவும் இல்லை.

இது உண்மையெனில் ஐசிசி அல்லது பிசிசிஐயிடம் ஏதேனும் கடிதம் பெறப்பட வேண்டும். இதுவரை அதுமாதிரியான கடிதம் எதையும் நாங்கள் பெறவில்லை. எங்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை அரசியலில் கலக்கக் கூடாது. இதில் அரசியல் இருக்கக் கூடாது. நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தயாராகி வருகிறோம். இது வெற்றிகரமானப் போட்டியாக அமையும் என நம்புகிறோம்.

ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், நாங்கள் எங்களுடைய அரசு என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்போம். அரசு என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் நல்ல உறவையே வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் அதைச் செய்ய வேண்டும் என்றில்லை.

நான் இன்னும் நேர்மறையாகவே உள்ளேன். கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது. காலம் தான் அனைத்துக்கும் பதில் சொல்லும்" என்றார் மொஷின் நாக்வி.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவும் அரசியல் சூழலால் 2008-க்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதில்லை. பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் தொடர்களில் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. எனினும் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இந்தியாவுக்கு வந்து விளையாடியது பாகிஸ்தான் அணி. 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. அப்போதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை. இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடைபெற்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in