
மெல்போர்ன் டெஸ்டின் 3-வது நாள் முடிவில், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக சதம் அடித்துள்ளார் நிதிஷ் குமார்.
2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது. இன்று (3-வது நாள்) 28 ரன்களுடன் தேவையில்லாத ஒரு ஷாட் அடித்து ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த். பிறகு ஜடேஜாவை 17 ரன்களுக்கு வீழ்த்தினார் லயன்.
இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகிவிடுமோ என்று இந்திய ரசிகர்கள் பயந்துகொண்டிருந்தபோது 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டியும், வாஷிங்டன் சுந்தரும் நம்பமுடியாத கூட்டணியை அமைத்தார்கள்.
இருவரும் சேர்ந்து 127 ரன்கள் எடுத்தபோது அரை சதமடித்து ஆட்டமிழந்தார் வாஷிங்டன் சுந்தர். பும்ராவும் வெளியேறிய பிறகு பரபரப்பான சூழலில் தனது முதல் சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தார் 21 வயது நிதிஷ் குமார். இதன்பின் மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் முடிவடைந்தது.
3-வது நாள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்து இந்தியா ஃபாலோ ஆனைத் தவிர்த்தாலும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.