சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நிகோலஸ் பூரன் ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்காக டி20யில் அதிக ரன்கள் (2,275) எடுத்தவர், அதிக ஆட்டங்களில் (106) விளையாடியவர் எனும் பெருமையுடன் ஓய்வு.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நிகோலஸ் பூரன் ஓய்வு
ANI
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி பேட்டர் நிகோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி பேட்டர் நிகோலஸ் பூரன் 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2019-ல் அறிமுகமானார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்காக 61 ஒருநாள் ஆட்டங்களில் 39.66 சராசரியில் 11 அரை சதங்கள், 3 சதங்கள் உள்பட 1,983 ரன்கள் எடுத்துள்ளார். 106 சர்வதேச டி20களில் 136.39 ஸ்டிரைக் ரேட்டில் 13 அரை சதங்கள் உள்பட 2,275 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பை தகுதிச் சுற்றிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் விலகிய பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று டி20 தொடரிலும் நிகோலஸ் பூரன் இடம்பெறவில்லை.

கடந்த நவம்பரில் 100-வது சர்வதேச டி20யில் விளையாடிய நிகோலஸ் பூரன், இன்னும் 100 சர்வதேச டி20களில் விளையாட முடியும் என்றார். இந்நிலையில், வெறும் 29-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பூரன் அறிவித்துள்ளார்.

2022-ல் மேற்கிந்தியத் தீவுகளின் வெள்ளைப் பந்து கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20யில் தலா 15 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவருடைய தலைமையில் இரண்டிலும் தலா 4 ஆட்டங்களில் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் பூரன்.

29 வயதிலேயே ஓய்வு பெற்றாலும், மேற்கிந்தியத் தீவுகளுக்காக டி20யில் அதிக ரன்கள் (2,275) எடுத்தவர், அதிக ஆட்டங்களில் (106) விளையாடியவர் எனும் பெருமையுடன் ஓய்வு பெறுகிறார்.

ஐபிஎல் 2025-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்காக விளையாடிய பூரன், 196.25 ஸ்டிரைக் ரேட்டில் 5 அரை சதங்களுடன் 524 ரன்கள் விளாசினார். 2024-ல் டி20யில் 170 சிக்ஸர்கள் விளாசினார். டி20யில் ஓராண்டில் ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸரும் இது தான். இத்தகைய ஃபார்மில் உள்ள நிகோலஸ் பூரனின் கவனம் டி20 லீக் போட்டிகளை நோக்கி திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

டி20 லீக் போட்டிகளில் சிபிஎல், ஐபிஎல், ஐஎல்டி20, பிபிஎல் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வந்த பூரன், எம்எல்சி, தி ஹண்ட்ரட் போட்டியிலும் அடுத்தடுத்து கூடுதல் கவனத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in