
லக்னெள அணி முதல் ஆட்டத்தில் தோற்றபோது அந்த அணி மீது ரசிகர்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மை ஏற்பட்டது. ரிஷப் பந்தின் மோசமான பேட்டிங், சரியான முடிவுகளைத் தராத சில யோசனைகள், அணி உரிமையாளரின் தொடர் தலையீடுகள் குறித்த விவாதங்கள் போன்றவை லக்னெள அணிக்கு ஆரம்பத்திலேயே பாதகமான அமைந்தன.
இன்று, ஹைதரபாதில் சன்ரைசர்ஸை முதலில் பேட்டிங் செய்யவைத்து, 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியபோது எல்லோருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. 2024 முதல் ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் மூன்று முறை முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 277/3, 201/3, 286/6 என ரன்களைக் குவித்து வந்த நிலையில் அதன் சொந்த மண்ணிலேயே 190 ரன்களுக்கு மேல் எடுக்கவிடாமல் செய்ததிலேயே முதல் வெற்றி கிடைத்தது லக்னெளவுக்கு.
பவர்பிளேயில் மிட்செல் மார்ஷும் நிகோலஸ் பூரனும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சைப் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். முதல் 10 பந்துகளில் 10 ரன்களை மட்டும் எடுத்தது லக்னெள. மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு பூரனும் மார்ஷும் வானவேடிக்கை நிகழ்த்தினார்கள். 3-வது ஓவரில் 17 ரன்கள், 4-வது ஓவரில் 18 ரன்கள், 5-வது ஓவரில் 17 ரன்கள், 6-வது ஓவரில் 11 ரன்கள் என பவர்பிளேயில் கொத்தாக 77 ரன்கள் லக்னெளவுக்குக் கிடைத்தது. ஹைதரபாத்துக்குச் சென்று சன்ரைசர்ஸ் அணியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கும் தருணமாக பவர்பிளே ஓவர்கள் காட்சியளித்தன.
பவர்பிளே முடிந்தும் சன்ரைசர்ஸுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அடுத்த இரு ஓவர்களில் 34 ரன்கள் கிடைத்தன லக்னெளவுக்கு. 18 பந்துகளில் அரை சதமெடுத்தார் பூரன். இந்த வருட ஐபிஎல்-லில் இதுதான் அதிகவேக அரை சதம். 26 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து 9-வது ஓவரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பூரன் ஆட்டமிழந்தபோது லக்னெள அணி 120 ரன்களை அதற்குள் குவித்து வெற்றியை நோக்கி ராஜநடை போட்டுக்கொண்டிருந்தது. 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷும் 11-வது ஓவரில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ரிஷப் பந்த் 15 ரன்களுக்கும் பதோனி 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தாலும் அப்துல் சமத், கடைசிக் காரியங்களைப் பத்திரமாக முடித்தார். லக்னெள அணி 16.1 ஓவர்களிலேயே 193/5 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. சமத் 8 பந்துகளில் 22 ரன்களும் மில்லர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் அணிக்கு இது மறக்கக் கூடிய ஓரிரவு.
எப்போதும் சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறபோது களை கட்டும். ஆனால் இன்று வழக்கமான பவர்பிளே அமையவில்லை. ஷார்துல் தாக்குரின் அடுத்தடுத்த பந்துகளில் அபிஷேக் சர்மா 6 ரன்களுக்கும் இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, அணியைப் பத்திரமாகக் கரை சேர்க்கும் பொறுப்பு டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்டது. பவர்பிளேயில் 62 ரன்கள் கிடைத்தன சன்ரைசர்ஸுக்கு. பிரின்ஸ் யாதவ் பந்தில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் டிராவிஸ் ஹெட். 10-வது ஓவரில் சன்ரைசர்ஸின் ஸ்கோர் - 96/3. பந்துவீசிய பிரின்ஸ் யாதவ் கையில் பட்ட பந்து, ஸ்டம்பில் விழ 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கிளாசென். ஐந்து முக்கிய பேட்டர்கள் பெரிதாகப் பங்களிக்காதபோது 200 ரன்களுக்கு எங்கே போவது? நிதிஷ் குமார் ரெட்டியின் நிதான ஆட்டம் 32 ரன்களுக்கு முடிந்தது. அனிகெத் வர்மா 13 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்து நடு ஓவர்களில் ஆச்சர்யப்படுத்தினார். எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்த கம்மின்ஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருவழியாக 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். 4 விக்கெட்டுகள் எடுத்து இன்னொருமுறை ஆச்சர்யப்படுத்தினார் ஷார்துல் தாக்குர். 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுடன் 29 ரன்கள் மட்டும் கொடுத்தார் இளம் வீரர் பிரின்ஸ் யாதவ்.