டெஸ்ட் தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து அணி.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24 அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும் கில் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் லேதம் 86 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 48 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்ஸில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த ஜெயிஸ்வால் 77 ரன்களுக்கு வெளியேறினார். ஜெயிஸ்வால், ரோஹித் சர்மா, கில், கோலி, சர்ஃபராஸ் கான் என அனைத்து நட்சத்திர வீரர்களையும் மிட்செல் சான்ட்னர் வெளியேற்றினார்.
ஜடேஜா கடைசி வரை போராடி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் சான்ட்னர் இந்த டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றுள்ளது.
கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
அதேபோல், நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 1 அன்று மும்பையில் தொடங்குகிறது.
இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.