
மும்பை டெஸ்டை வென்று இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. சொந்த மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்றுள்ளது இந்தியா.
இரு நாள்களுக்கு முன்பு தொடங்கிய மும்பை டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும் இந்தியா 263 ரன்களும் எடுத்தன. 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று, நியூசிலாந்து அணி மீதமுள்ள ஒரு விக்கெட்டை இழந்து 2-வது இன்னிங்ஸில் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஜாஸ் படேலின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா, இரு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகளுடன் தனது பழைய திறமையை மீட்டெடுத்தார். இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு என்பதால் ஓரளவு சுலபமாகக் கரையேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் 2-வது இன்னிங்ஸிலும் தடம்புரண்டது. ரோஹித் 11, ஜெயிஸ்வால் 5, கில் 1, கோலி 1, சர்ஃபராஸ் கான் 1, ஜடேஜா 6 என சொற்ப ரன்கள் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். தனி ரகமாக ரிஷப் பந்த் மட்டும் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு ரன்களை விரைவாக எடுத்தார். இதற்கு முன்பு மும்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல், இந்த டெஸ்டிலும் இந்திய அணியை மிரட்டினார்.
3-வது நாள் உணவு இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 53 ரன்களும் வாஷிங்டன் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு சர்ச்சைக்குரிய விதத்தில் ரிஷப் பந்த் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பந்து, கால்காப்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக 3-வது நடுவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கள நடுவர்களிடம் விவாதித்த ரிஷப் பந்த், வேதனையுடன் மெல்லமாக நடந்து வெளியேறினார். பிறகு அஸ்வின் 8 ரன்களுக்கும் வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இறுதியில், இந்திய அணி 29.1 ஓவர்களில் 121 ரன்களுக்குச் சுருண்டு 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளும் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதுவரை, இந்தியாவில் ஒருமுறை டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து, முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றதுடன் 3-0 என முழுமையாக வெற்றி பெற்று வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் விளையாடிய 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்தியா இதுபோல முழுமையாகத் தோற்பது முதல்முறை.