தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதன்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பேன் என்றார். இரு அணிகளும் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கின.
நியூசிலாந்து தொடக்க பேட்டர் ஜார்ஜியா பிளிம்மர் 9 ரன்களுக்கு 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். சூஸி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் கூட்டணி அமைத்தார்கள். முதலிரு ஓவர்களில் 20 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அடுத்த 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளே முடிவில் மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து.
நீண்ட நேரம் களத்திலிருந்த சூஸி பேட்ஸ் 32 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். கேப்டன் சோஃபி டெவினும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால், பவர் பிளேவுக்கு பிறகு 14-வது ஓவர் வரை ஒரு பவுண்டரிகூட நியூசிலாந்து அடிக்கவில்லை.
புரூக் ஹாலிடே 14-வது ஓவரிலிருந்து பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார். 15-வது ஓவரில் நியூசிலாந்து 100 ரன்களை கடந்தது. கடைசி கட்ட அதிரடிக்கு ஹாலிடே உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது 28 பந்துகளில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
2-வது ஓவரிலிருந்து களத்திலிருந்த அமெலியா கெர் 19-வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தாலும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். இவர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், வைட் பந்து மூலம் 3 ரன்கள் என 16 ரன்களை தென்னாப்பிரிக்கா கொடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. மேடி கிரீன் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க பேட்டர்கள் கேப்டன் லாரா வோல்வார்தட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்கள். குறிப்பாக கேப்டன் வோல்வார்தட் முதல் 4 ஓவர்களில் மொத்தம் 4 பவுண்டரிகளும் பவர்பிளேயின் கடைசி ஓவரில் இரு பவுண்டரிகளும் விளாச 6 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே முடிந்தவுடன் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது நியூசிலாந்து. பிரிட்ஸ் முதல் விக்கெட்டாக 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் வோல்வார்தட்டும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அனெகி போஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அமெலியா கெர் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு எந்தவொரு தென்னாப்பிரிக்க பேட்டரும் பொறுப்பை ஏற்று விளையாடவில்லை. வந்ததும் போனதுமான பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்கள். அனுபவ பேட்டர் மரிஸான் கேப்பும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 9-ஐ தாண்டியது. இந்த நெருக்கடியிலேயே கூட்டணியைக் கட்டமைக்க தென்னாப்பிரிக்கா தவறியது. பின்வரிசை பேட்டர்கள் பெரிய ஷாட்களுக்கு முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்காவால் எடுக்க முடிந்தது.
இதன்மூலம், 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதன்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்தபடியாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவுக்கு இந்த முறையும் சோகமே மிஞ்சியது.