
நியூசிலாந்து ஜாம்பவான் டிம் சௌதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 107 டெஸ்டுகளில் விளையாடியவர் டிம் செளதி. 19 வயது வீரராக 2008-ல் ஆரம்பித்த செளதியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என அதகளத்துடன் தொடங்கிய இவருடையப் பயணம் அதே இங்கிலாந்துக்கு எதிராக முடிவுக்கு வந்துள்ளது.
ஹேமில்டனின் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது நியூசிலாந்து. இதுவே நியூசிலாந்து அணிக்காக செளதி விளையாடிய கடைசி டெஸ்ட்.
107 டெஸ்டுகளில் 391 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் டிம் செளதி. 47 வெற்றிகளுடன் அதிக டெஸ்ட் வெற்றிகளை ருசித்த நியூசிலாந்து வீரரும் செளதி தான். சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என நியூசிலாந்து தோற்கடித்ததில் செளதியின் பங்களிப்பும் உண்டு.
செளதி என்றால் அவர் அடிக்கும் சிக்ஸர்களும் ஞாபகத்துக்கு வரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 98 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயிலுடன் இணைந்து 4-வது இடத்தில் உள்ளார் டிம் செளதி.
சௌதி புள்ளி விவரங்கள் சில
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர்
சர் ரிச்சர்ட் ஹாட்லி - 431 விக்கெட்டுகள்
டிம் சௌதி - 391 விக்கெட்டுகள்
டேனியல் வெட்டோரி - 361 விக்கெட்டுகள்
நியூசிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்
டிம் சௌதி - 234 விக்கெட்டுகள்
சர் ரிச்சர்ட் ஹாட்லி - 201 விக்கெட்டுகள்
அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்டுள்ள நியூசிலாந்து வீரர்
டிம் சௌதி - 47
டாம் லேதம் - 44
ராஸ் டெய்லர் - 44
கேன் வில்லியம்சன் - 44
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்
பென் ஸ்டோக்ஸ் - 133
பிரெண்டன் மெக்கல்லம் - 107
ஆடம் கில்கிறிஸ்ட் - 100
கிறிஸ் கெயில் - 98
டிம் சௌதி - 98
"100 சிக்ஸர்கள் (98), 400 டெஸ்ட் விக்கெட்டுகள் (391), 100 கேட்ச் (86) என அனைத்தையும் சாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன்" என்றார் டிம் சௌதி.