
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 462 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து வெற்றிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து இன்னிங்ஸில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. முதல் ஓவரில் மீதமிருந்த இரு பந்துகளை வீச பும்ரா வந்தார். களத்தில் நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் இருந்தார். முதல் பந்து வெளிப்பக்கம் செல்ல, டாம் லேதம் தடுத்து விளையாட முயன்று பந்தைத் தவறவிட்டார். அடுத்த பந்தை உள்பக்கமாக ஸ்விங் செய்து லேதம் விக்கெட்டை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் பும்ரா.
இதன்பிறகு, டெவான் கான்வே மற்றும் வில் யங் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பும்ரா மற்றும் சிராஜ் மிக அற்புதமாகப் பந்துவீசியும் அது கைக்கொடுக்கவில்லை. நிறைய பந்துகள் பேட்டுக்கு நெருக்கமாகச் சென்று, பேட்டை உரசாமல் கீப்பரை அடைந்தன. பும்ரா, சிராஜ் ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடியது, நியூசிலாந்துக்கு இடையில் பவுண்டரிகளை கொடுக்கத் தொடங்கியது.
பும்ரா தொடர்ச்சியாக 6 ஓவர்கள் வீசியபோதும், விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி வந்ததால் தொடர்ச்சியாக 7-வது ஓவரையும் வீசுமாறு ரோஹித் அழைத்தார். பும்ரா தொடர்ச்சியாக வீசிய 7-வது ஓவரில் கான்வே விக்கெட் கிடைத்தது. கான்வே ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தில் மீண்டும் நம்பிக்கை பிறந்தது.
ஆனால், அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். சுழற்பந்துவீச்சை அறிமுகம் செய்தார் ரோஹித். ஜடேஜா வீசிய முதல் ஓவரில் வில் யங் இரு பவுண்டரிகள் அடித்தார். கண் இமைக்கும் நேரத்தில் 50 ரன்களை கடந்தது நியூசிலாந்து.
பும்ராவை நிறுத்தி சிராஜை மீண்டும் கொண்டு வந்தார் ரோஹித். இதுவும் விக்கெட்டுக்கு பலனளிக்கவில்லை. உடனடியாக இந்த முனையிலிருந்து குல்தீப் யாதவ் வந்தார். இவருடைய முதல் ஓவரில் வில் யங் சிக்ஸர் அடித்தார். அடுத்த ஓவரில் ரவீந்திரா இரு பவுண்டரிகள் அடித்தார். முதல் 3 ஓவர்களில் குல்தீப் யாதவ் 26 ரன்கள் கொடுத்தார். நியூசிலாந்தும் 80 ரன்களை கடந்து வெற்றிக்குத் தேவையான ரன்னை 25-க்கு கீழ் குறைத்தது.
இதன்பிறகு, குல்தீப் யாதவ் நிறுத்தப்பட்டு அஸ்வின் கொண்டுவரப்பட்டார். இந்தியாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. யங் மற்றும் ரவீந்திரா இந்தியப் பந்துவீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்டு நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்தார்கள்.
2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் யங் 48 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளில் இந்தியாவில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இது.